உள்ளூர் செய்திகள்

குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணராக அம்மன் எழுந்தருளுகிறார்

Published On 2023-10-19 08:39 GMT   |   Update On 2023-10-19 08:39 GMT
  • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று 5-ம் நாள் ஆகும்.
  • 10-ம் நாளான வருகிற 24-ந்தேதி இரவு பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும்.

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று 5-ம் நாள் ஆகும். காலை முதல் இரவு 7 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு நடக்கிறது. மேலும் நகைச் சுவை பட்டிமன்றம், வில்லிசை நடைபெறும். இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.

மேலும் ஏராளமான பக்தர்கள் இன்றும் காலை யிலே கடற்கரைக்கு வந்து கடல் நீர் தீர்த்தம் எடுத்துச் சென்றனர். இதைப்போல விரதம் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் கோவிலில் இலவச மாக வழங்கும் காப்பு என்ற மஞ்சள் கயிறு வாங்கி கட்டிக் கொண்டனர்.

காப்பு கட்டிய பின்பு வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். அந்த காணிக்கைகளை 10-ம் நாளான வருகிற 24-ந்தேதி கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள். அன்று இரவு பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும்.

தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர் பகவதி, செயல் அலுவலர் ராம சுப்பிர மணியன், கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து உள்ள னர்.

Tags:    

Similar News