வேப்பனப்பள்ளி அருகே திறந்தே கிடக்கும் ஆழ்துளை கிணறு அருகில் துணி துவைக்கும் பெண்.
அலேகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் பொங்கி பாயும் தண்ணீர்
- ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வற்றிய நிலையில் ஆழ்துளை கிணறு கைவிடப்பட்டது.
- ஆழ்துளை கிணற்றில் தற்போது தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியே வருகிறது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருந்து அலேலிங்கபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வற்றிய நிலையில் ஆழ்துளை கிணறு கைவிடப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அந்த ஆழ்துளை கிணறு திறந்த படியே உள்ளது. மேலும் ஆபத்தை உணராமல் இப்பகுதி குழந்தைகளும் அதன் அருகே விளையாடி வருகின்றனர்.
தற்போது வேப்ப னப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாகி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மூடப்படாத இந்த ஆழ்துளை கிணற்றில் தற்போது தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியே வருகிறது.
ஆழ்துளை கிணற்றை மூடாமல் இருப்பதால் தற்போது கிராம மக்கள் அதில் வரும் தண்ணீரை அப்படியே துணிகளை துவைக்கவும்,ஆடு, மாடுகளை குளிப்பாட்டவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆழ்துளை கிணற்றில் இருந்து 24 மணி நேரமும் தண்ணீர் சாலையில் வெளியேறி வருவதால் சாலை அரிப்பு ஏற்பட்டு சேறும், சகதியுமாக மாறியுள்ளது.
உடனடியாக திறந்த வெளியில் இருக்கும் இந்த ஆழ்துளை கிணற்றை மூடி உரிய வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.