கோவை வனப்பகுதியில் 7 நாள் போராட்டத்துக்கு பின் காட்டுத்தீ முழுவதும் அணைப்பு
- கடந்த 11-ந் தேதி மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
- பயர் டிரேசிங் முறையிலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தது
கோவை,
கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்தில் உள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே உள்ள மலையில் கடந்த 11-ந் தேதி மாலையில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரக ஊழியர்கள் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயை அணைக்கும் பணியில் விமானப்படையின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.
இதன்மூலம் தீ கட்டுப்படுத்த நிலையில் 2 மண்டலங்களில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி90 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.
நேற்று 7-வது நாளாக தீயை அணைக்கும் பணி நடந்தது. இப்பணியில்வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உள்பட சுமார் 200 பேர் ஈடுபட்டனர்.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், புற்கள் அதிகளவில் இருந்ததாலும் காட்டு தீ நேற்று காருண்யா பின்புறம் உள்ள மலைப்பகுதி வரை பரவியது. இதையடுத்து, தீ தடுப்பு கோடுகள் அமைத்தும், பயர் டிரேசிங் முறையிலும் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடந்தது.தீயை அணைக்கும் பணியில் கோவை வனத்துறையினர் மட்டுமின்றி நீலகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர்.
7 நாட்களாக வனத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கையால் காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.