ஓசூரில் துணிகர சம்பவம்: தொழிலதிபரிடம் ரூ.2.16 கோடி மோசடி -சைபர் கிரைம் போலீசார் விசாரணை
- இணையதளங்களில் தகவல்களை தேடி உள்ளார்.
- ரூ.2.16 கோடி ஏமாற்றிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 51). இவர் ஆட்டோெமாபைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் சில தொழில்களில் இறங்க ஆசைப்பட்ட மோகன்ராஜ் அதற்காக இணையதளங்களில் தகவல்களை தேடி உள்ளார்.
அப்போது அவருக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில் தற்போது மருந்து பொருட்களை வாங்கி விற்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றும், தங்கள் மூலமாக மருந்து பொருட்களை வாங்கினால் அதிக அளவில் கமிஷன் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து சுமார் 13 வங்கி கணக்குகள் மூலம் ரூ.2 கோடியே 16 லட்சத்து 59 ஆயிரத்து 500-ஐ மோகன்ராஜ் செலுத்தி உள்ளார். ஆனால் எந்த நிறுவனத்தில் இருந்து அவருக்கு மருந்து பொருட்கள் வரவில்லை.
இதையடுத்து தனக்கு வந்த இ-மெயில் முகவரி குறித்து விசாரணை நடத்தினார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மோகன்ராஜ் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜிடம் ரூ.2.16 கோடி ஏமாற்றிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.