உள்ளூர் செய்திகள்

கணினி அறிவியல் பாடத்திற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியபோது எடுத்த படம்.

பாண்டமங்கலம் அரசு பள்ளியில் கணினி அறிவியல் பாடத்திற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது

Published On 2022-06-25 09:49 GMT   |   Update On 2022-06-25 09:49 GMT
  • பாண்டமங்கலம் அரசு பள்ளியிலேயே கணினி அறிவியல் பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் பள்ளியை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர்.
  • பாண்டமங்கலம் அரசு பள்ளியில் மாணவர்களின் போராட்டத்திற்கு பிறகு கணினி அறிவியல் பாடத்திற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நி–லைப்பள்ளியில் பாண்டமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 430 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிதம், கலை, வேளாண்மை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளது. ஆனால் கணினி அறிவியல் பாடப்பிரிவு மட்டும் இல்லை.

இப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் கணினி அறிவியல் பாடப்பிரிவில் பயில தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேல் கணினி அறிவியல் பாடப்பிரிவு இப்பள்ளியில் இல்லை. எனவே மாற்று பாடப்பிரிவில் சேர்ந்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இல்லையென்றால் அருகே உள்ள பள்ளிக–ளுக்கு சென்று சேர்ந்து கொள்ளும்படி கூறியுள்ளார். பாண்டமங்கலத்தில் இருந்து நீண்ட தூரத்திற்கு மாணவர்கள் செல்ல முடியாததால் இப்பள்ளியிலேயே கணினி அறிவியல் பாடப்பிரிவை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்து மாணவர்கள் பள்ளியை நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் தங்கவேலிடம் கேட்டபோது பாடப்பிரிவுகளில் முழுமையாக சேர்க்கை நடைபெறாததால் புதிதாக ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்த முடியாது என தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று காலை பள்ளி திறந்ததும் மீண்டும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல், பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் தலைமையாசிரியர் தங்கவேலிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையை தொடர்ந்து கணினி அறிவியல் பாடத்தை தொடங்க தலைமை ஆசிரியர் சம்மதம் தெரிவித்தார்.

இதனையடுத்து பள்ளியில் கணினி அறிவியல் பாடத்திற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. கணினி அறிவியல் பாடத்திற்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொண்ட பேரூராட்சி தலைவர் சோமசேகர், துணைத் தலைவர் முருகவேல், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோருக்கு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News