உள்ளூர் செய்திகள்

எருது விடும் விழாவில் விதிமுறைகள் மீறப்பட்டால் நடவடிக்கை -கிருஷ்ணகிரி கலெக்டர் எச்சரிக்கை

Published On 2023-01-12 15:12 IST   |   Update On 2023-01-12 15:12:00 IST
  • வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
  • விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக மாவட்ட அளவிலான எருது விடும் விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிக்காட்டு நெறிமுறைகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2023-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த சம்பந்தப்பட்ட விழா குழுவினர்கள், ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இடம் மற்றும் நாள் குறிப்பிட்டு உரிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அரசிதழில் பதிவு செய்யப்பட்டதற்கான கிராமங்களின் விவரங்கள் அடங்கிய அரசாணை நகல் இணைக்க வேண்டும்.

விழாவின் போது நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தாங்களே பொறுப்பு என ரூ.50-க்கான உறுதிமொழி பத்திரத்தில் விழா குழுவினர் வழங்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்டுள்ளதான ஆவணம் சமர்பிக்க வேண்டும். விழாவில், அனுமதிக்கப்பட்டுள்ள காளைகளின் எண்ணிக்கை தொடர்பான உத்தேசபட்டியல் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டு விழா நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கான அரசாணை நகல் இணைக்க வேண்டும்.

எருது விழா அரங்கத்தின் மாதிரி வரைப்படம் இணைக்க வேண்டும். விழா அரங்கத்தின் நீளம் 200 மீட்டர் இருக்க வேண்டும். எருதுகள் ஓடும் தளம் 125 மீட்டர் இருக்க வேண்டும். காளைகளின் உரிமையாளர்கள் காளைகளுக்கான உடற்தகுதி சான்று பெற வேண்டும்.

அவ்வாறு சான்று பெற்ற காளைகள் மட்டுமே எருது விடும் விழாவில் அனுமதி வழங்கப்படும். எருது விடும் விழா நிகழ்ச்சிகளில் ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதி வழங்கப்படும். 2 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று இணைக்க வேண்டும்.

தமிழக அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் திறந்தவெளி அரங்கின் அளவிற்கேற்ற சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். காளைகள் ஓடும் பகுதியில் 8 அடி உயர இரட்டை தடுப்பு அரண்கள் அமைக்க வேண்டும். காளைகளை துன்புறுத்த கூடாது.

எனவே, எருது விடும் விழா நிகழ்ச்சியில் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி கலெக்டர்கள் சரண்யா, சதீஷ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் தாசில்தார்கள், எருது விடும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News