உள்ளூர் செய்திகள்

கோவையில் டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி

Published On 2023-03-04 17:02 IST   |   Update On 2023-03-04 17:02:00 IST
  • கோவை போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
  • போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை அறியும் பணியில் இறங்கினர்.

கோவை:

சென்னையில் உள்ள தலைமை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு இரவு 11 மணியளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் கோவை மாவட்டம் கோவில்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை குண்டு வீசி தாக்க போவதாக கூறினார். கூறிய உடனேயே தனது செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவை போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு அப்படி எதுவும் இருந்ததாக தெரியவில்லை. இதனால் அது புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை அறியும் பணியில் இறங்கினர்.

கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை பெற்று அது எங்கிருந்து வந்தது என சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவில்பாளையம் பகுதியில் ரோட்டில் சென்ற போது செல்போன் சிக்னல் காண்பித்தது. அப்போது அந்த வழியாக சென்ற நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் தான் டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவர் விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்த ஸ்ரீதர்(வயது51). கட்டிட தொழிலாளி என்பதும், குடிபோதையில் அவரது மனைவியிடம் சண்டை போட்டு விட்டு டாஸ்மாக் கடையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News