உள்ளூர் செய்திகள்

வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

Published On 2023-09-26 15:02 IST   |   Update On 2023-09-26 15:02:00 IST
  • தேயிலை தோட்டத்தை ஒட்டி காட்டு யானை உலா வந்ததால், தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
  • கும்கி யானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி பந்தலூர் அருகே காட்டு யானை வாகனங்களை வழிமறித்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வழிமறிப்பு காட்டு யானை பந்தலூர் அருகே சேரம்பாடி, சேரங்கோடு, படச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கட்டை கொம்பன் என்று அழைக்கப்படும் காட்டு யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. ரேஷன் கடைகள், வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்கிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் படச்சேரி பகுதிக்குள் யானை புகுந்தது. பின்னர் குடியிருப்பில் முகாமிட்டது.

இதையடுத்து அந்த பகுதியில் இருந்த மின் கம்பம் மீது மரத்தை சாய்த்து போட்டது. இதில் மின்கம்பம் உடைந்து சேதமடைந்தது.

மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. நேற்று காலை 10 மணிக்கு சேரங்கோடு அருகே பந்தலூர்-சேரம்பாடி சாலையில் உள்ள காப்பி காடு பகுதியில் காட்டு யானை சாலையில் முகாமிட்டு, வாகனங்களை வழிமறித்தது.

னத்துறையினரை துரத்தியது தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உத்தரவின்படி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் ஞானமூர்த்தி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து யானையை விரட்ட முயன்றனர். அப்போது ஆக்ரோஷம் அடைந்த யானை வனத்துறையினரை சிறிது தூரம் துரத்தி தாக்க முயன்றது.

இதனால் வனத்துறையினர் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேயிலை தோட்டத்தை ஒட்டி காட்டு யானை உலா வந்ததால், தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானை அட்டகாசம் செய்து வருவதால், கும்கி யானை உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News