கோவை காந்திபுரத்தில் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் பலி
- கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
- காட்டூர் போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
கோவை,
கோவை காந்திபுரம், ஆர்.வி.ரவுண்டானா அருகே, நேற்று மாலை ஒரு வாலிபர் அங்கு உள்ள மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், கீழே இறங்கும்படி வற்புறுத்தினர். ஆனாலும் அவர் கீழே இறங்கவில்லை.
ஒருகட்டத்தில் அவர் திடீரென மேலே தொங்கிய மின்ஒயரை தொட்டார். இதில் கண் இமைக்கும் நேரத்தில் வாலிபரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் சம்பவ சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி பரிதாபமாக பலியானார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் மின்வாரிய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர் .
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காட்டூர் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை சோதனை செய்த போது, மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைனா மஜ்கி (வயது48) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்,
கோவையில் எங்கு தங்கியிருந்து வேலை பார்த்தார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த நபரின் முகவரியை தொடர்பு கொண்டு உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.