திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை? ஆரோவில் போலீசார் விசாரணை
- இன்று காலை வினோத்தை பணிக்கு அழைத்து செல்ல அவருடன் பணியா ற்றுபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.
- கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் கலைவாணர் நகர் உள்ளது. இங்கு வினோத் (வயது 25) என்பவர் தனது பாட்டி வீட்டில் தங்கி பெயிண்டர் வேலை செய்து வந்தார். இன்று காலை வினோத்தை பணிக்கு அழைத்து செல்ல அவருடன் பணியா ற்றுபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் வினோத்தின் செல்போனை தொடர்பு கொண்டனர். நீண்ட நேரமாக அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து வீட்டின் கதவை தட்டினார்கள். கதவையும் அவர் திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் வினோத் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதல் தோல்வியால் வினோத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.