உள்ளூர் செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.,

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க எளிய வழிமுறை - சட்டசபையில் ரூபி மனோகரன் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் பதில்

Published On 2023-04-14 15:23 IST   |   Update On 2023-04-14 15:23:00 IST
  • கட்டணம் செலுத்தி மண் எடுக்கும் முறைக்கு அனுமதி வழங்க வேண்டும்.
  • அரசின் அனுமதியோடு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்

நெல்லை:

தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், தமிழக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

அதில் பேசும்போது, செங்கல்சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருபவர்கள் மற்றும் விவசாயிகள், ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களால், அதை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அதனால், 2011-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தபடி, அதாவது, அரசுக்குச் சொந்தமான குளங்கள், ஏரிகள் மற்றும் தனியார் நிலங்களில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு, அரசாங்கத்திடம் உரிய கட்டணம் செலுத்தி, அந்த வண்டல் மண்ணை எடுக்கும் முறைக்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான மண்பாண்ட தொழில் செய்வோர், செங்கள் சூளை நடத்துவோர் மற்றும் விவசாயிகள் பயன் அடைவார்கள், என்றார்.

அமைச்சர் பதில்

இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து கூறியதாவது:-

செங்கல்சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட கலைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எளிதாக கிடைக்கும் வகையில் இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3 வகைகள்

அரசு விதிகளின்படி மூன்று வகையில், அவர்கள் அரசின் அனுமதியோடு வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம். முதல் விதியின்படி, மணல் எடுக்கக்கூடிய பட்டா நிலத்தில், அங்கே மணல் குவாரி செயல்படவில்லை என்கிற சான்றிதழ் பெற்று, ஒரு வருட காலத்துக்கு அனுமதி பெற்று மணல் எடுக்கலாம்.

இரண்டாவது, உரிய இடத்தில் மணல் எடுக்க, மாவட்ட கலெக்டரிடம் அனுமதிக் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். மணல் எடுக்கக்கூடிய இடத்தில் குவாரி செயல்படவில்லை என்கிற தடையில்லாச் சான்று பெற வேண்டும். கலெக்டர் அனுமதி தந்த பிறகு, ஒன்றரை மீட்டர் ஆழம் வரை அங்கே மணல் எடுத்துக்கொள்ளலாம்.

மூன்றாவது, ஏரி, குளம் ஆகியவற்றில் மணல் எடுக்கக்கூடிய அனுமதியை மாவட்ட கலெக்டரே வழங்குவார். அந்த அனுமதியைப் பெற உரிமைக் கட்டணம், பதிவுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும்.

செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், மண்பாண்ட கலைஞர்கள், விவசாயிகள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்கிற வகையில், முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில், அவர்கள் வண்டல் மண் எடுக்க எளிமையான விதிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Tags:    

Similar News