மேட்டுப்பாளையத்தில் இருந்து மைசூர் வழியாக பெங்களூருவுக்கு தொடர் ரெயில் வண்டி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
- பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று கலெக்டரிடம் நேரில் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.
- கால்நடை துறை சார்பில் மாடு மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்த வேண்டும்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று கலெக்டரிடம் நேரில் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பல ரோடுகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விரிவாக்கம் செய்யும் போது, மழைநீர் வடிகால் அமைத்து மழைநீரை அருகே உள்ள குளம், குட்டைகளில் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து மைசூர் வழியாக பெங்களூருவுக்கு விவசாய உற்பத்தியாளர்கள் பயன்படும் வகையில் தொடர் ெரயில் வண்டி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோவை மாவட்ட கிராம ஊராட்சிகளில் விவசாய மாடு மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. இதனை கண்டறிந்து கால்நடை துறை சார்பில் மாடு மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்த வேண்டும்.
இந்த திட்டத்திற்கு தற்போது கால்நடை துறை சார்பில் அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களை கண்டறிந்து விவசாய கால்நடை தீவன வளர்ச்சி மற்றும் மேய்ச்சலுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சாதி மத கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த முப்பறிபாளையத்தை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரின் 8 ஏக்கர் நிலத்தை, சிலர் அவர் உயிருடன் இருக்கும் போதே இல்லை என தெரிவித்து போலி சான்றிதழ் பெற்று அபகரித்துள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.