உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகரில் தொடர் சம்பவம்; மோட்டார் சைக்கிள்களை திருடியது பள்ளி மாணவர்கள்- சி.சி.டி.வி. காமிராவால் சிக்கினர்

Published On 2023-01-21 09:38 GMT   |   Update On 2023-01-21 09:38 GMT
  • நெல்லை மாநகர பகுதியில் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.
  • புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மோட்டார் சைக்கிள் திருட்டு

பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், தியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை வழி அனுப்ப வந்தார். இதற்காக மோட்டார் சைக்கிளை பஸ்நிலையம் முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.

பின்னர் வந்து பார்த்த போது அது திருட்டு போய் இருந்தது. இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சி.சி.டி.வி. காமிரா காட்சி

இதற்கிடையே புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சில சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து நேற்று போலீசார் பஸ்நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அதே சிறுவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களை திருடினர். உடனடியாக அவர்களை பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

5 மாணவர்கள் சிக்கினர்

அதில் அவர்கள் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து திருடி சென்றது தெரியவந்தது. இதற்காக அவர்கள் போலியாக சாவிகளையும் தயார் செய்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News