உள்ளூர் செய்திகள்

தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த பிளஸ்-2 மாணவி குடும்பத்துக்கு புதிய வீடு - கலெக்டர் திறந்து வைத்தார்

Published On 2023-09-18 09:01 GMT   |   Update On 2023-09-18 09:01 GMT
  • கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்விற்காக பேச்சித்தாயும், அவரது தம்பியும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தனர்.
  • இதனையடுத்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் தட்டார் ரஸ்தா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு பேச்சித்தாய் என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவரது வீட்டிற்கு மின் வசதி இல்லாமல் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்விற்காக பேச்சித்தாயும், அவரது தம்பியும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தனர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக தகவல் கலெக்டர் செந்தில்ராஜ் கவனத்துக்கும் வந்தது. இதனையடுத்து. கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்பேரில் மாணவியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து அவரது வீட்டை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது தங்களுக்கு வீடு கட்ட நிதி தரவேண்டும் என மாணவி மற்றும அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் விருப்ப நிதியில் ரூ.2.10 லட்சம் நிதி அவர்களுக்கு வழங்கினார். அதன்பின் பேரூராட்சி சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது சாத்தான்குளம் வர்த்தக சங்க செயலர் மதுரம் செல்வராஜ், துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் கலெக்டரிடம், சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகம் அருகில் காலியாக உள்ள பழைய கூட்டரங்கில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர். இதனையடுத்து அந்த கட்டடத்தை பார்வையிட்டு அதில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அப்போது திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருசந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், தாசில்தார் ரதிகலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் செந்தூர்ராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News