கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பேரிடர்கால அவசர கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் மீட்பு படை குழுவினர் ஆலோசனை நடத்திய காட்சி.
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை குழு இன்று நெல்லை வருகை
- தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு-4 குழுவை சேர்ந்த மீட்பு படை வீரர்கள் இன்று நெல்லை வந்துள்ளனர்.
- இந்த குழு 14 நாட்கள் தங்கி இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
நெல்லை:
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு-4 குழுவை சேர்ந்த மீட்பு படை வீரர்கள் இன்று நெல்லை வந்துள்ளனர்.
கமாண்டர் சஞ்சய் தேஸ்வால் தலைமையில் சுமார் 16 பேர் அடங்கிய அந்த குழு இன்று காலை நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகைக்கு வந்தடைந்தது. இந்த குழு 14 நாட்கள் தங்கி இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
அணைக்கட்டுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அடங்கிய பகுதிகளில் கூடுதல் ஆய்வு மேற்கொள்கின்றனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை இந்த குழுவினர் மேற்கொள்ள உள்ளனர்.
அதே நேரத்தில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் குழுவினர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளனர்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபத்தான காலகட்டங்களில் முதலுதவி சிகிச்சை முறைகள் அளிப்பது குறித்த பயிற்சிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த குழுவினர் நடத்த உள்ளனர்.