உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
- மரைக்காயர் இன்று அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு நடந்து சென்றுள்ளார்.
- வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மரைக்காயர் துடிதுடித்து இறந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தென்கலம் புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மரைக்காயர்(வயது 45). தொழிலாளி.
இவர் இன்று அதிகாலை கங்கைகொண்டான் சிப்காட் நான்கு வழிச்சாலை அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மரைக்காயர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மரைக்காயர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரைக்காயர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.