சூலூர் அருகே வாளியில் இருந்த தண்ணீரில் மூழ்கி 1 வயது பெண் குழந்தை பலி
- தண்ணீர் வாளியில் குழந்தை மூழ்கிய நிலையில் பேச்சு மூச்சின்றி சாவு
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள பழனியப்பா தேவர் வீதியை சேர்ந்தவர் பாலகுமாரன். கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று இருந்தார்.
வீட்டில் பாலகு மாரனின் மனைவி மற்றும் 1 வயது மகளான அனுஸ்ரீ ஆகியோர் இருந்தனர். மதியம் 1 மணி அளவில் பாலகுமாரனின் மனைவி குளிப்பதற்காக சென்றார். அப்போது பெண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தது. குளித்து விட்டு வந்து பார்த்த போது வீட்டில் தண்ணீருடன் வைக்கப்பட்டு இருந்த வாளியில் குழந்தை மூழ்கிய நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது.
இதனை பார்த்து குழந்தையின் தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் குழந்தையை தூக்கி கொண்டு வெளியே ஓடி வந்தார். பக்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த பாலகுமாரன், என்ன நடந்தது என்று கேட்டார். அப்போது அவரது மனைவி நடந்த சம்பவத்தை கூறினார்.
உடனடியாக 2 பேரும் குழந்தையை சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் அனுஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.