துடியலூர் அருகே மின்வாரிய உதவி பொறியாளர் வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
- நடைபயிற்சிக்கு சென்ற போது கொள்ளையர்கள் துணிகரம்.
- போலீசார் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை,
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 32). இவர் துடியலூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று சுரேந்திரன் தனது தந்தைக்கு பிறந்த நாள் என்பதால் அவருக்கு பரிசளிப்பதற்காக நகை கடைக்கு சென்று தங்க மோதிரம் வாங்கினார். பின்னர் அந்த மோதிரத்தை பூஜை அறையில் வைத்து இருந்தார்.
அதிகாலையில் சுரேந்திரன் நடைபயிற்சிக்காக சென்றார். அப்போது வீட்டின் மேல்மாடியில் உள்ள கதவை பூட்டாமல் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர் யாரோ மேல்மாடியின் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த மாலை, ஆரம், கம்மல், செயின், கைசெயின், மோதிரம், வளையல், நெக்லஸ் உள்பட 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
நடைபயிற்சிக்கு சென்று விட்டு திரும்பிய சுரேந்திரன் தந்தை பரிசளிப்பதற்காக பூஜை அறையில் வைத்து இருந்த மோதிரத்தை பார்த்த போது அதனை காணவில்லை. இதனையடுத்து அவர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 70 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த சுரேந்திரன் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய உதவி பொறியாளர் வீட்டில் 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.