கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 70 பஸ்கள் இயக்கம்
- கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
- தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
கோவை
கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை என தொடர்ந்து விடுமுறை வருவதால் கோவையில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர்.
இதற்காக கோவையில் இருந்து நெல்லை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. இன்றில் இருந்து விடுமுறை தொடங்கி விட்டதால் நேற்று மாலையே பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
இதனால் கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், திருவள்ளுவர் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் வசதிக்காக சிங்காநல்லூரில் இருந்து திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும், காந்திபுரத்தில் இருந்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டன.
இருப்பினும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் அவர்களுக்கு போதிய பஸ்கள் கிடைக்கவில்லை. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. காத்திருந்தும் பஸ்கள் வராததால் மக்கள் சிரமம் அடைந்தனர்.பண்டிகை காலங்களில் முன்கூட்டியே அதிகளவு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கையும் வைத்தனர்.
பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் கோவையில் கூடுதலான பஸ்கள் இயக்கப்பட்டது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, பண்டிகை காலம் என்பதால், நேற்று கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட்டது. தற்போது பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 70 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறை சார்பில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.