உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 8 முகாம்களில் 600 பேர் தங்க வைப்பு

Published On 2022-09-09 11:10 GMT   |   Update On 2022-09-09 11:10 GMT
  • மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • ஈரோடு மாவட்டத்தில் 8 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்

ஈரோடு, செப். 9-

கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரமடைந்ததால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் 4-வது முறையாக மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றுக் கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பவானி புதிய பஸ் நிலையம் கந்தன் நகர், காவிரி நகர், பசவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பழைய பாலம், கீரைக்கார வீதி, பாலக்கரை, பழைய பஸ் நிலையம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த 400 -க்கும் மேற்பட்ட மக்கள் மீண்டும் அருகே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கொடுமுடி காவிரி கரையோர பகுதிகளிலும் வெள்ளம் நீர் புகுந்தது.

இதனால் கொடுமுடி அடுத்த இலுப்பு தோப்பு, சத்திரப்பட்டி போன்ற பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அருகில் இருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஈரோடு மாவட்டத்தில் 8 முகாம்களில் 600 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு குறைய தொடங்கியதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக இன்று மேட்டூர் அணையிலிருந்து 80 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனினும் ஈரோடு காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 முகாம்களில் 600 பேர் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News