நீலகிரியில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 352 வாக்காளா்கள்
- வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டாா்.
- நவம்பா் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டாா். பின்னா் அவா் பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஊட்டி தொகுதியில் 96 ஆயிரத்து 730 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 483 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 7 போ் என மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 220 வாக்காளா்கள் உள்ளனா்.
கூடலூா் சட்டசபை தொகுதியில் 92 ஆயிரத்து 378 ஆண் வாக்காளா்களும், 97 ஆயிரத்து 156 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 536 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
குன்னூா் தொகுதியில் 90 ஆயிரத்து 723 ஆண் வாக்காளா்களும், 99 ஆயிரத்து 869 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் என மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 596 வாக்காளா்கள் உள்ளனா்.
மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் சோ்த்து 2 லட்சத்து 79 ஆயிரத்து 831 ஆண் வாக்காளா்கள், 3 லட்சத்து 2 ஆயிரத்து 508 பெண் வாக்காளா்கள், 13 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 5 லட்சத்து 82 ஆயிரத்து 352 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். கடந்த ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளா்களை விட 5 ஆயிரத்து 334 வாக்காளா்கள் இதில் குறைவாக உள்ளனா்.
2023 ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நவம்பா் 9 முதல் டிசம்பா் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் சோ்த்தல், நீக்குதல், பிழை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொ ள்ளுதல் போன்றவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு வாக்குச்சாவடி களிலும் நியமிக்கப்பட்ட அலுவலா்களிடம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக நவம்பா் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். அனைத்து திருத்தங்களுக்கு பிறகு 2023 ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.