உள்ளூர் செய்திகள்

சங்ககிரி அருகே குச்சி ஐஸ் சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு

Published On 2025-04-26 11:02 IST   |   Update On 2025-04-26 11:02:00 IST
  • கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.
  • போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் கிழக்கு ஊராட்சி புள்ளிபாளையத்தில் பிரசித்திபெற்ற ஏணிபாலி பச்சியம்மன் கோவில் உள்ளது. அங்கு அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதேபோல் வெள்ளிக்கிழமையான நேற்று ஏணிபாலி பச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் சங்ககிரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள், பொங்கல் வைத்து சாமி வழிபட்டனர். அப்போது கோவில் வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் குச்சி ஐஸ் விற்பனை செய்துள்ளார்.

அவரிடம் குழந்தைகள் சிலர் ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதனையடுத்து சிறிது நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சங்ககிரி பறையங்காட்டானூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், தேவி ஆகியோரின் மகன் அகி (14), நங்கவள்ளியை சேர்ந்த குணசேகரன், கோகிலா ஆகியோரின் மகள் ஸ்ரீ திக்சா (7), ஆகிய 2 குழந்தைகள் சங்ககிரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

அதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் ஆதவ ராஜ் (5), அ.புதூரைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் யோகேஸ்வரன் (18), தர்மபுரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகள் ஸ்ரீநிதி (10) ஆகியோர் சிகிச்சை பெற்றனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறியபோது, வாந்தி வயிற்றுப்போக்குடன் வந்த குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தைகள் நலமுடன் உள்ளதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் குச்சி ஐஸ் விற்பனை செய்த வியாபாரியை தேடி வருகின்றனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News