நீலகிரியில் அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்காணிக்க 42 குழுக்கள் அமைப்பு
- 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
- பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளது.
ஊட்டி,
தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு விழா ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சாலை பாதுகாப்பு விழா நடந்தது. விழாவை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தாா்.
பின்னர் அவர் பேசியதாவது:-
சாலை பாதுகாப்பு வார விழாவின் நோக்கமே வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். வளைவு, குறுகிய சாலை, பாலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் உள்ள இடங்களில் கவனமுடன் செல்ல வேண்டும்.
போக்குவரத்து சிக்னல்களை மதித்து, வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தாலும், நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிந்தும் செல்ல வேண்டும்.
மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த பகுதிகளை கண்காணிக்க 42 குழுக்களும் அமைக்கப்பட்டு, அவர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். இதுதவிர பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்துத்துறையினர் தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், 30 பேருக்கு இலவச ஹெல்மெட்டும் வழங்கினார்.
இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், திட்ட மேலாண்மை இயக்குநா் மோனிகா ராணா, டேன் டீ பொதுமேலாளர் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வெலிங்டன் பாளையவாரிய முதன்மை செயல் அலுவலர் அலி உள்பட பலர்் கலந்து கொண்டனா்.