வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 4 பேர் சாவு
- மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வேன் ஒன்று அவர் மீது மோதியது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை கொல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது52).
கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3-ந் தேதி மோட்டார் சைக்கிளில் கந்திகுப்பம் சென்றார்.
பின்னர் மீண்டும் அவர் வீடு திரும்புவதற்காக கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று காவேரிப்பட்டணம் தாரைகொட்டாய் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் மகன் நந்தகுமார் (21). சம்பவத்தன்று இவர் கூட்டப்பட்டி அருகே உள்ள பாலக்கோடு- காவேரிப்பட்டணம் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருப்பத்தூர் மாவட்டம் சிபிபுரா பகுதியைச் சேர்ந்தவர் கதிப்அஹமது (28). இவர் அதேபகுதியில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்து வந்தார்.
இவர் சம்பவத்தன்று ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் சாவு
கர்நாடக மாநிலம் பெங்களூரு கவுதமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி சாந்தி (39). இவர் ஓசூர் லேலாண்ட் 2-வது யூனிட் பகுதியில் மொபட்டில் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.