கோவையில் 2 வாலிபர்களிடம் பணம் பறித்த 4 பேர் கைது
- ஆண்டணி ஆனந்த் பாபு மருதமலை ரோட்டில் சென்ற போது, அவரை 3 பேர் வழிமறித்தனர்.
- ஆண்டணி ஆனந்த் பாபு ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சுந்தராபுரம் ஜூபிலி வீதியை சேர்ந்தவர் ஆண்டணி ஆனந்த் பாபு(வயது43).
இவர் சம்பவத்தன்று வேலை முடித்து விட்டு,வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மருதமலை ரோட்டில் சென்ற போது, அவரை 3 பேர் வழிமறித்தனர். பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டினர்.
தொடர்ந்து அவரின் கைகளை பின்புறம் கட்டி வைத்து விட்டு, அவரது பையில் இருந்த ரூ.3 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆண்டனி ஆனந்த்பாபுவிடம் பணம் பறித்தது, அவரது நண்பரான சாரமேடு பிலால் எஸ்டேட்டை சேர்ந்த பாரூக் நவாஸ்(22) மற்றும் அவரது நண்பர்கள் முகமது மிசல்(19), ரிஸ்வான்(19) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை வெள்ளலூர் பேச்சியம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார்(28). சம்ப வத்தன்று இவர் அங்குள்ள மார்க்கெட்டிற்கு பின்புறம் இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவர், கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி ரூ.13 ஆயிரத்தை பறித்து சென்றார். இதுகுறித்து பெரியகடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கெம்பட்டி காலனியை சேர்ந்த சூர்யா என்பவரை கைது செய்தனர்.