காஞ்சிபுரத்தில் மாநில அளவிலான கலைவிழா போட்டிகளில் 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு- முதலமைச்சர் பரிசு வழங்குகிறார்
- பரதநாட்டியம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் கலைத் திருவிழாவில் இடம் பெற்றன.
- குழு போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த கலைத் திருவிழாவில் 34 வகையான தனிநபர் போட்டிகளும், 4 வகையான குழு போட்டிகளும் நடைபெற்றன.
பரதநாட்டியம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் இந்த கலைத் திருவிழாவில் இடம் பெற்றன. மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இடையேயான போட்டிகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரம், குன்றத்தூர் ஆகிய 2 இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. 34 தனிநபர் போட்டிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் வீதம் தலா 38 பேர் பங்கேற்றனர்.
குழு போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜனவரி 12-ந்தேதி நடை பெறும் பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.