விருத்தாசலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
- விருத்தாசலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அதன் பேரில் ஊழியர் ஜெயராஜ், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளார்.
கடலூர்:
விருத்தாசலம் காட்டுகூடலூர் சாலை, அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு ஜெயராஜ் (மாற்றுத்திறனாளி) மற்றும் ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் அங்கு வந்த திரு.வி.க. நகரை சேர்ந்த சித்திக் (வயது 24), அமீர் (23), வசந்த் (23) ஆகிய 3 பேர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர். 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொன்னதாகவும்,போ ன்பேயில் 200 ரூபாய் அனுப்புகிறேன், பெட்ரோல் போட்டது போக மீதி 150 ரூபாயை பணமாக திருப்பி தாருங்கள் என்று பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கூறியுள்ளனர். அதன் பேரில் ஊழியர் ஜெயராஜ், மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளார்.
ஆனால் பெட்ரோல் பங்கின் கணக்கிற்கு 200 ரூபாய் பணம் வரவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த அந்த இரண்டு நபர்களும்,அங்கு காத்திருந்தனர், சிறிது நேரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்துள்ளனர், அப்போது வலி தாங்க முடியாமல் மாற்றுத்திறனாளியான பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராஜ், தன்னை தாக்கிய நபர்களின் கையைப் பிடித்து கடித்துள்ளார். அங்கு வந்த மற்றொரு பெட்ரோல் பங்க் ஊழியர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார் .அதன்பிறகு,அங்கிருந்து சென்ற இரண்டு நபர்களும், மற்றொரு நபரை அழைத்து வந்து, பெட்ரோல் பங்க் அறையில் படுத்து இருந்த ஜெயராஜை அடித்து தாக்கியுள்ளனர். அங்கிருந்த மற்றொரு பெட்ரோல் பங்க் ஊழியரையும் கட்டைக் குச்சியால் தாக்கி விட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட சென்ற பொழுது ,சண்டை ஏற்பட்டு, பெட்ரோல் பங்க் ஊழியர் கையைப் பிடித்து கடித்து விட்டதாக அங்கிருந்த போலீசாரிடம் கூறியுள்ளனர். அதன்பிறகு, காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெயராஜ் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று, நடந்த சம்பவங்களை போலீசாரிடம் கூறியதன் பேரில் ஆஸ்பத்திரியில் இருந்த 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இது தொடர்பான சி.சி.டி.வி. விடியோ விருத்தாசலம் பகுதியில் வைரலாக பரவி வருகிறது.