உள்ளூர் செய்திகள்

ஊட்டி-கோத்தகிரி சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 3 பேரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

Published On 2022-11-24 14:50 IST   |   Update On 2022-11-24 14:50:00 IST
  • மோட்டார் சைக்கிள்களில் திரும்பி வந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.
  • பொதுமக்களுக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.

மோட்டார்சைக்கிள்கள் ஒவ்வொன்றும் பயங்கர சத்தத்துடன் வேகமாக சாலைகளில் சென்றன. அதில் சென்ற வாலிபர்கள் 'வீலிங்' செய்தபடி பாய்ந்து சென்றனர். இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அங்கு திரண்ட அவர்கள், அதே பாதையில் மோட்டார் சைக்கிள்களில் திரும்பி வந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர்.

அப்போது பொதுமக்களுக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி குமார், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள், ஊட்டி நகரை சேர்ந்த தினேஷ் பாலன் (வயது 25), தீபக்ராஜ் (24), ரித்தீஷ்(24) ஆகியோர் என்பதும், தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றும் இவர்கள் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இளைஞர்கள் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்றனர்.  

Tags:    

Similar News