நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
- குலசேகர பாண்டியன் வண்ணார் பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் குறிச்சி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார்.
- வேகமாக வந்த வாகனம் செல்லத்துரை மீது மோதியது.
நெல்லை:
மேலப்பாளையம் குறிச்சி சாந்தமூர்த்தி தெருவை சேர்ந்தவர் குலசேகர பாண்டியன் (வயது 40). டிரைவர். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
நேருக்கு நேர் மோதல்
நேற்று குலசேகர பாண்டியன் வண்ணார் பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் குறிச்சி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், குலசேகர பாண்டியன் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குலசேகர பாண்டியன் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து
நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (75). இவர் சம்பவத்தன்று அங்குள்ள மெயின் ரோட்டில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் ஒன்று செல்லத்துரை மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை செல்லத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி பலி
மூன்றடப்பு தெக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (45). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று அங்குள்ள வாகைகுளம் ரோட்டில் கணேசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார். இதுகுறித்து மூன்ற டைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.