உள்ளூர் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஏழை, எளிய விவசாயிகளுக்கு தொடர்ந்து பயிர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் அரசு வழிகாட்டுதல் படி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் பயிர் கடன்கள் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் பரிந்துரை செய்தனர். சில கடன்கள் தள்ளுபடிக்கு பொருந்தாது என சரிபார்ப்பு அலுவலர்களால் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
தற்போது பணி ஓய்வு பெற உள்ள மற்றும் பணிபுரிந்து வரும் பல ஊழியர்களுக்கு, பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
இதனால் பணியாளர்கள் மன உளைச்சலுடன் பணிபுரிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.