உள்ளூர் செய்திகள்
கைது

சென்னையில் நடந்த குட்கா வேட்டையில் ஒரே நாளில் 132 பேர் கைது

Published On 2022-06-03 14:47 IST   |   Update On 2022-06-03 14:47:00 IST
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’ மூலம் சிறப்பு சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன்படி நேற்று பள்ளி, கல்லூரி மற்றும் இதர இடங்களில் புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 132 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 70,782 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், விமல் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 232 சிகரெட்டு பாக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.2,730/- பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News