உள்ளூர் செய்திகள்
விசாரணை

ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை- 5 பேரை பிடித்து விசாரணை

Published On 2022-06-03 05:49 GMT   |   Update On 2022-06-03 05:49 GMT
விருத்தாசலம் அருகே ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
சிதம்பரம்:

சென்னை எழும்பூரில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இதனால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்த ரெயிலில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணிக்க ராஜ் (வயது 40), அம்பத்தூரை சேர்ந்த முருகன் (37), சென்னை ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்த செந்தில்குமார் (39), திருவள்ளூரை சேர்ந்த பொன்னுசாமி (40), முத்துக்குமார் ஆகியோர் தாம்பரம் பகுதியில் இருந்து வந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தனர்.

தாம்பரத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட நேரம் முதல் 5 பேரும் குடிபோதையில் பேசிக்கொண்டே இருந்தனர். இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. ஆத்திரம் அடைந்த பயணிகள் இதனை தட்டிக்கேட்டனர். உடனே போதையில் இருந்த 5 பேரும் பயணிகளிடம் ரகளை செய்தனர். மற்றவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் 5 பேரும் கேட்கவில்லை.

இந்த ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. உடனே ரெயிலில் இருந்த பயணிகள் இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்படி போலீசார் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கினர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

உடனே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் புறப்பட்டு சென்றது. குடிபோதையில் இருந்த 5 பேரும் போலீசாரிடம் தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Tags:    

Similar News