உள்ளூர் செய்திகள்
பொதுமக்களிடம் இருந்து மேயர் சரவணன் மனுக்களை வாங்கிய காட்சி.

வண்ணார்பேட்டையில் 2 இடங்களில் நிழற்குடை அமைக்க வேண்டும்- குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் கோரிக்கை

Published On 2022-06-01 15:01 IST   |   Update On 2022-06-01 15:01:00 IST
நெல்லை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் வண்ணார்பேட்டையில் 2 இடங்களில் நிழற்குடை அமைக்க மேயரிடம் கவுன்சிலர் கோரிக்கை வைத்துள்ளார்.
நெல்லை: 

நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

மேயர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் மாநகராட்சி பொறியாளர் நாராயணன், மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கந்தன் அளித்த மனுவில், மாநகர பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாக வண்ணாரப்பேட்டை விளங்கிவருகிறது.

இந்த இடத்தில் பிரபல ஜவுளிக்கடை முன்பு பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிர்புறம் ஒரு பஸ் நிறுத்தம் இருந்தது. தற்போது சாலை விரிவாக்கத்தின் போது அதனை எடுத்து விட்டார்கள்.

 இதனால் பொதுமக்கள் வெயிலில் காத்து நிற்க வேண்டி உள்ளது. எனவே இந்த 2 இடத்திலும் மாநகராட்சி சார்பில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

பாளை முஸ்லிம் நடுத்தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், பாளையம் கோட்டூர் வார்டு எண் 8, பஜனைமடம் பகுதியில் பாளையம் கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாயில் உள்புறமாக பொதுமக்கள் தொடர்ந்து குப்பைகளை கொட்டி தீயிட்டு எரித்து வருகின்றனர்.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதனை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். 

இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குப்பை வண்டிகள் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளதாக தகவல்கள் வருகிறது. 

எனவே கூடுதலாக பணியாளர்களை பணிக்கு அமர்த்தி ராமயன்பட்டி குப்பை கிடங்கிற்கு இந்த குப்பைகளை சேகரித்து கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
Tags:    

Similar News