சூலூர் விமானப்படை தள விரிவாக்கம் - பருவாய் கிராமத்தில் நிலம் எடுப்பு பணி தொடக்கம்
திருப்பூர்:
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில், பாதுகாப்பு தொழில்துறை பூங்கா அமைய உள்ளது. இதற்காக கூடுதல் நிலம் தேவைப்படுவதால் நில எடுப்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சி கழகம் சார்பில் இதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்துறை பூங்கா ஏற்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இத்துடன் விமானப்படை ஓடுதளமும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், திருப்பூர் மாவட்டம் பருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 86.38 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த இடங்களை கையகப்படுத்த ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். முதல் கட்டமாக வீட்டு மனைகள், விளை நிலங்களின் அளவீடு, மரங்கள், கிணறு எண்ணிக்கை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் நிலம் கையகப்படுத்தப்பட்டு தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.