உள்ளூர் செய்திகள்
அமைச்சர் சக்கரபாணி

ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை- அமைச்சர் சக்கரபாணி

Published On 2022-05-30 11:20 GMT   |   Update On 2022-05-30 11:20 GMT
இனிமேல் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மதுரை:

மதுரை விமான நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் ரேசன் அரிசி கடத்துவதை தடுக்கும் வகையில் கடந்த 26-ந் தேதி சென்னையில் எனது தலைமையில் உணவு வழங்கல் துறை உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு இடங்களில் இருந்து ரேசன் அரிசி கடைக்கு செல்லாமல் கடத்தப்படுவதாகவும் தகவல் வந்திருக்கிறது. இந்த நிலையைப் போக்க தற்போது உள்ள 286 குடோன்களில் புதிதாக கோடு நம்பர் பதிவு செய்யப்பட்ட சாக்குகள் மூலம் அரிசி விநியோகம் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த இருக்கிறோம். அப்போது எந்த குடோனில் இருந்து இந்த அரிசி மூடை சென்று உள்ளது என்பதனை கண்டறியப்படும்.

இனிமேல் தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்துபவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் புதிய யூனிட் சி.பி.சி.ஐ.டி. குழு அமைக்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கைகள் பாயும். அரிசி வாங்க வரும் பொதுமக்கள் கைரேகை பதிவு செய்ய முடியவில்லை என்ற நிலையை போக்க கருவிழி பதிவு முறை நடைமுறைப்படுத்தபட உள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. நெல் சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூடைகள் மழையால் பாதிக்கப்படும் நிலையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News