உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த பெண்?

கடலூர் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று புதைத்த பெண்?

Published On 2022-05-30 15:01 IST   |   Update On 2022-05-30 15:01:00 IST
கடலூர் அருகே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தாரா என்ற கோணத்தில் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ராஜசேகர் திடீரென மாயமானார். இதுபற்றி விஜயலட்சுமி போலீசில் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள உறவினர்கள் விஜயலட்சுமியிடம் உனது கணவர் எங்கே என்று கேட்டதற்கு வெளியூர் சென்றுள்ளார் என பதில் கூறினார்.

இதனிடையே ராஜசேகர் கொன்று புதைக்கப்பட்டதாக அந்த பகுதியில் பரவலாக தகவல் பரவியது. இது நடுவீரப்பட்டு போலீசாருக்கும் தெரியவரவே தகவல் அறிந்த போலீசார் எஸ்.புதுக்குப்பம் கிராமத்துக்கு விரைந்தனர். அப்போது விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்.

அதோடு போலீசார் விஜயலட்சுமியின் வீடு மற்றும் நிலப்பகுதிகளை ஆய்வு செய்தனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான தடயங்கள் காணப்பட்டது. உடனே போலீசர் விஜயலட்சுமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. ராஜசேகரின் நண்பர் மோகன். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் விஜயலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த விபரம் ராஜசேகருக்கு தெரியவந்தது.

உடனே அவர் தனது மனைவியை கண்டித்தார். எனவே விஜயலட்சுமி, கள்ளக்காதலன் மோகனுடன் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்து புதைத்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சந்தேகப்படும் இடத்தில் தோண்டுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது. அங்கு தோண்டும் பணி நடந்து வருகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது? என முடிவு தெரியவரும். 
Tags:    

Similar News