உள்ளூர் செய்திகள்
மலர் கண்காட்சியில் இடம் பெற்ற மாட்டு வண்டி, பட்டாம்பூச்சி வடிவங்கள் முன்பாக போட்டோ எடுத்துக்கொண்ட மழலைகள்.

கோடைவிழா தொடக்கம் : சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குதூகலம்

Published On 2022-05-26 10:55 GMT   |   Update On 2022-05-26 10:55 GMT
ஏற்காடு கோடைவிழா தொடக்கம் : சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குதூகலம்
ஏற்காடு:

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கியது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்க்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். 

இந்த மலர்க்கண்காட்சியில் மேட்டூர், அணை, வள்ளுவர் கோட்டம், பட்டாம்பூச்சி உள்ளிட்ட 7 மலர் வடிவமைப்புகள் 5 லட்சம் மலர்களைக் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கம் அருகே அனைத்து துறையின் சார்பில் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் அரங்குகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவாணன் திறந்து வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்குகளையும் மக்கள் பிரதிநிதிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் சுற்று லாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில்,  தமிழகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் 15 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பகுதிகளில் ரூ.50 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா இடங்களில் அணுகு சாலைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் மிதக்கும் உணவகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கிளியூர் மலை கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் சாகசப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப் பயணிகள் டென்ட் மூலம் தங்குதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தமிழகத்தில் சூழல் சுற்றுலா, கேரவன் சுற்றுலா ஆகியவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதன்மூலம் சுற்றுலாத் துறையில் புதிய மைல்கல் எட்டப்படும் என்றார்.  

இதனையடுத்து நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அனைத்து கிராம கலைஞர் வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 900 கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் அரசின் செலவில் விளை நிலங்களாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இலவச போர்வெல், இலவச மின்சாரம், இலவச இடுபொருள்கள் உள்ளிட்டவை மூலம் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வேளாண்மை புரட்சி நிகழ்த்தப்படும் என்றார்.

விழாவில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஏற்காடு மலை கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏற்காடு பகுதியில் வசித்து வரும் மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளும்.ஏற்காட்டில் கோடை விழா நடத்தப்படுவதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுவதுடன், உள்ளூர் மலைவாழ் மக்களுக்கும்,உள்ளூர் வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கும் என்றார். 



இவ்விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ் ஆர்.சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொருப்பாளர் டி.எம்.செல்வகணபதி. ஏற்காடு ஒன்றிய பொருப்பாளர் தங்கசாமி,ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பாலு, கிளை செயலாளர்கள் ஆட்டோ ராஜா, குணசேகரன்,வைரம், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ரவி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜியகுமார்.மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News