உள்ளூர் செய்திகள்
கொளுத்தும் வெயில்

சென்னையில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது

Published On 2022-05-24 05:57 GMT   |   Update On 2022-05-24 11:30 GMT
அக்னி நட்சத்திரம் முடிவடைய இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் அதிக வெயில் கொளுத்தி வருகிறது.
சென்னை:

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. வருகிற 28-ந்தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கிய காலக்கட்டத்தில் சென்னை தமிழகத்தின் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அக்னி நட்சத்திரத்தின் நடு பகுதியில் இதமான காலநிலை நிலவியது.

இந்த நிலையில் மழை குறைந்துள்ள நிலையில் தற்போது கத்திரி வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் முடிவடைய உள்ள நிலையில் பொது மக்களை வெயில் வறுத்தெடுக்கிறது.

சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இது இந்த ஆண்டில் ஏற்பட்ட அதிகபட்ச வெப்பநிலை ஆகும். சென்னை நுங்கம்பாக்கம், திருத்தணி, வேலூர், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவானது. தமிழகத்தில் மொத்தம் 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. குறைந்த பட்சமாக கொடைக்கானலில் 66 டிகிரி வெயில் பதிவானது. அக்னி நட்சத்திரம் முடிவடைய இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் அதிக வெயில் கொளுத்தி வருகிறது.

மீனம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் அதிக அளவு வெயில் பதிவானதால் அந்த பகுதியில் ஈரப்பதம் தலா 76 மற்றும் 57 சதவீதமாக குறைந்தது. மேலும் நாளையும், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இன்றும் 100 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் காற்று நிலத்திற்குள் செல்ல முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்ததால் வெப்பநிலை உயர்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூன் முதல் வாரம் வரை இந்த வெப்பநிலை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News