உள்ளூர் செய்திகள்
கொலை முயற்சி

கூலிப்படையை ஏவி தந்தையை கொல்ல முயன்ற மகன்கள்

Published On 2022-05-23 16:11 IST   |   Update On 2022-05-23 16:11:00 IST
விழுப்புரத்தில் கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்ய முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் அகமது (வயது 55). ம.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான இவர் கட்டிட காண்டிராக்டராக உள்ளார். அதோடு வட்டி தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு அமீர் அலி, சாருக்அகமது ஆகிய மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மூத்த மகன் அமீர்அலி, மகளுக்கும் திருமணம் ஆகி விட்டது. இவர்கள் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இன்று அதிகாலை அகமது சென்னை செல்ல முடிவு செய்தார். அதன்படி தனது காரில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வந்தார்.

அங்கு காரை நிறுத்திவிட்டு சென்னை செல்ல நடந்து வந்தார். அகரம் செல்லும் பாலம் அருகே 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பல் திடீரென அகமதுவை மறித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் அவரை கழுத்தை அறுக்க முயன்றது. உஷாரான அகமது அங்கிருந்து தப்பினார்.

ஒரத்தூர் அருகே சென்றபோது ஒரு வாடகை காரை பிடித்து விழுப்புரம் வந்தார். விழுப்புரம்-காட்பாடி மேம்பாலம் அருகே பின்தொடர்ந்து வந்த கும்பல் காரை வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த அகமது அங்கிருந்து காரை விட்டு இறங்கி ஓடினார்.

செம்மேடு செந்தமிழ் தெரு பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் அகமதுவை பிளேடால் கழுத்தை அறுத்தது. பதறிபோன அவர் கூச்சல் போட்டார் சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

அந்த கும்பல் பிடியிலிருந்து தப்பிய அகமதுவை அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைபெற்ற அகமது இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

புகார் மனுவில் சொத்துக்காக தனது மகன்கள் கூலி படையை ஏவி கொல்ல முயன்றதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News