உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சமையல் தொழிலாளியின் உறவினர்கள்.

களக்காட்டில் கொலை செய்யப்பட்ட சமையல் தொழிலாளியின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல்

Published On 2022-05-23 09:45 GMT   |   Update On 2022-05-23 09:45 GMT
களக்காட்டில் கொலை செய்யப்பட்ட சமையல் தொழிலாளியின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது43), சமையல் தொழிலாளி. இவர் நேற்று காலை வயலுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள தெப்பக்குளம் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் முருகனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

சம்பவ இடத்துக்கு நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முருகன் மீது எதிர் தரப்பினர் ஆத்திரத்தில் இருந்ததும் தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள கோவில் மற்றும் சில வீடுகள் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் நடமாட்டம் பற்றிய காட்சிகள் எதுவும் இல்லை. சி.சி.டி.வி. பொருத்தப்பட்டிருக்கும் இடங்களை தெரிந்து அதில் தங்களது உருவம் பதிவாகாமல் இருக்கும் வகையில் மர்ம நபர்கள் வயல் வெளிகள் வழியாக வந்து பதுங்கி இருந்திருக்கலாம் எனவும், முருகன் சம்பவ இடத்துக்கு வரும் போது அவரை திட்டமிட்டபடி கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசா ரணையை முடுக்கவிட்டுள்ளனர்.

இதற்கிடையே முருகனின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று 4 வாகனங்களில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொக்கிரகுளம்- மேலப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. மறியலில் ஈடுபட்ட முருகனின் உறவினர்கள் கூறியதாவது:- கூலிப்படைைய ஏவி முருகன் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

கொலை நடந்து இன்றோடு 2 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை என்ற பெயரில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் முருகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை முருகன் உடலை வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News