உள்ளூர் செய்திகள்
அதிமுக

கடலூரில் அ.தி.மு.க.வினர் 20ந் தேதி ஆர்ப்பாட்டம்- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் அறிக்கை

Published On 2022-05-18 11:11 GMT   |   Update On 2022-05-18 11:11 GMT
புதிய பஸ் நிலையத்தை வேறு இடத்தில் அமைப்பதை கண்டித்து கடலூரில் அ.தி.மு.க.வினர் 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
கடலூர்:

முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.சி.சம்பத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூரில் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு அருகிலேயே புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டால், பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்ற அடிப்படையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 18 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போது புதிய பஸ் நிலையம் அமைக்க எம்.புதூர் மற்றும் அரிசிபெரியாங்குப்பத்தில் இடம் தேர்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடலூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எம்.புதூரில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டால், பஸ் நிலையத்தை அடைவது என்பது மக்களுக்கு பெரும் காலதாமதத்தையும், பண விரயத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். அதனால் பஸ் நிலையத்தை முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது.

மேலும் கடலூர் மாநகராட்சி பகுதி முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு அங்கேயே எரிக்கப்படுகின்றன. இதனால் புகை மண்டலம் உருவாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

எனவே மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படும் அரசை கண்டித்தும், கடலூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் (20ந் தேதி) காலை 9 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எனவே இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News