உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

ஓடும் பஸ்சில் போதையில் பெண் பயணியிடம் தவறாக நடந்த கண்டக்டர் மீது வழக்கு

Published On 2022-05-16 11:11 GMT   |   Update On 2022-05-16 11:21 GMT
பெண் பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அந்த பெண் கண்டக்டர் மணிகண்ணனை தனது ஆதரவாளர்களுடன் ஆட்டோவில் கடத்தி சென்றார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து நேற்று பயணிகளை ஏற்றிகொண்டு விருத்தாசலம் நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் கதிர்வேல் ஓட்டினார். கண்டக்டராக மணிகண்ணன் வந்தார்.

அப்போது பெண் பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அந்த பெண் கண்டக்டர் மணிகண்ணனை தனது ஆதரவாளர்களுடன் ஆட்டோவில் கடத்தி சென்றார்.

இதை அறிந்த அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஒன்று திரண்டு விருத்தசாலம் பஸ் நிலையம் அருகே ஜங்சன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே கண்டக்டரை ஆட்டோவில் கடத்தி சென்றவர்கள், மீண்டும் பஸ் நிலையத்தில் அவரை விட்டுவிட்டு சென்றனர். இருந்தபோதிலும் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்தது. இதனால் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசார் கண்டக்டரை கடத்தி சென்றவர்களை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதை அடுத்து சமாதானம் அடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்க தொடங்கினர்.

இதுகுறித்து போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கண்டக்டர் மணிகண்ணன் போதையில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது. உடனே போலீசார் மணிகண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக உள்ளது.
Tags:    

Similar News