உள்ளூர் செய்திகள்
அரிய வகை வெள்ளை முள்ளம்பன்றி - டாமரின் குரங்கு குட்டி

விமானத்தில் கொண்டுவந்த அரிய வகை வெள்ளை முள்ளம்பன்றி- குரங்கு பறிமுதல்

Published On 2022-05-16 10:23 GMT   |   Update On 2022-05-16 10:23 GMT
வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆலந்தூர்:

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டி மற்றும் துணி கூடைக்குள் அரிய வகையான வெள்ளை நிற முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு குட்டி இருந்தது.

இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, வீட்டில் வளர்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை.

வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அந்த பயணியிடம் முறையான எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து சுங்கதுறை அதிகாரிகள் வெள்ளை நிற முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு குட்டியை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்களும் வந்து விலங்குகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதேபோல் வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

இந்த விலங்குகள் மூலம் நோய் தொற்று பரவாமல் இருக்க அவற்றை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News