உள்ளூர் செய்திகள்
ஊட்டியில் 2 நாட்கள் நடந்த ரோஜா பூங்காவை 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ரசித்தனர்
31 ஆயிரம் ரோஜா மலர்களால் ஆன 15 அடி உயரம் கொண்ட மர வீடு அமைக்கப்பட்டு இருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா கடந்த 7-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
நேற்றுமுன்தினம் ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் 31 ஆயிரம் ரோஜா மலர்களால் ஆன 15 அடி உயரம் கொண்ட மர வீடு அமைக்கப்பட்டு இருந்தது.
இதுதவிர குழந்தைகளை கவரும் வகையில் மோட்டு பட்லு, மான், பியானோ, பூட்டு, படகு, பனிமனிதன் போன்ற வடிவங்களும் தமிழக அரசின் திட்டமான மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஆகியவை ரோஜா மலர்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. தொடக்க நாளிலேயே ரோஜா கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
அவர்கள் ரோஜா மலர்களை பார்வையிட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த மலர்களால் ஆன வடிவங்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். முதல் நாளில் குழந்தைகள் உள்பட 15 ஆயிரம் பேர் ரோஜா கண்காட்சியை பார்வையிட்டனர்.
நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாபயணிகள் ரோஜா கண்காட்சியில் குவிந்தனர். நேற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். 2 நாட்கள் நடந்த ரோஜா கண்காட்சியை சுமார் 30 ஆயிரம் பேர் பார்த்து ரசித்தனர்.
நேற்று மாலை நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறந்த பூங்கா பராமரிப்புக்கு 22 கேடயங்களும், சிறந்த அரங்குகளுக்கு 44 கேடயங்களும், காட்சி ப்படுத்தப்பட்ட அரங்குகள் மற்றும் சிறப்பு பரிசுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 43 கேடயங்களும் என மொத்தம் 109 கேடயங்கள் வழங்கப்பட்டன. குட்ஷெப்பர்டு சர்வதேச பள்ளி மூன்று கோப்பைகளை வென்றது.
நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.