உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
திருவள்ளூர் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருத்தணியை அடுத்த தரணிவராகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார்(வயது23). இவருக்கு புட்லூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைக்காக இன்று நேர்காணல் இருந்தது. இதையடுத்து அவர் இன்று காலை திருத்தணியில் இருந்து மின்சார ரெயிலில் பயணம் செய்தார். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அருண்குமார் ரெயில் பெட்டியின் வாசலில் நின்றதாக தெரிகிறது.
ஏகாட்டூர் திருவள்ளூர் இடையே சென்று கொண்டிருந்தபோது மின்சார ரெயிலில் இருந்து அருண்குமார் தவறி கீழே விழுந்தார். இதில் ரெயிலுக்குள் சிக்கிய அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.