உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

இந்தி திணிப்புக்கு ரங்கசாமி மவுனம் காப்பது ஏன்? நாராயணசாமி கேள்வி

Published On 2022-05-12 14:42 IST   |   Update On 2022-05-12 14:42:00 IST
ஜிப்மரில் இந்தி திணிப்புக்கு ரங்கசாமி மவுனம் காப்பது ஏன்? முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி:

ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பை கண்டித்து காங். சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் 
எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தொடர்ந்து,  முன்னாள் முதல்-அமைச்சர்  நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவு, புதுவை மாநிலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியை திணிக்கும் வேலையை மத்திய அரசு செய்வதை காட்டுகிறது. 

அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி துணை போகிறாரா? எதற்காக அவர் வாய் திறக்கவில்லை. இந்தியை ஏற்க மாட்டேன் என சொன்னால் மறுநாளே அவர் முதல்-அமைச்சர் கிடையாது. 

அதனால்தான் ரங்கசாமி மவுனமாக இருக்கிறார். புதுவை மாநிலத்தை குட்டிச்சுவராக்கும் வேலையை முதல்- அமைச்சர், கவர்னர் செய்து வருகின்றனர். புதுவை மாநிலத்தில் தமிழ் மொழிதான் முதன்மையான மொழி, ஆங்கிலம் இணைப்பு மொழி. மாநிலத்தை ஒருங்கிணைக்க தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு மொழி பாரம்பரியமாகும். 

இதை எந்த காலத்திலும் காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது. எங்கள் போராட்டம் தொடரும்.

புதுவை மாநில பா.ஜனதா தலைவராக கவர்னர் தமிழிசை செயல்பட்டு வருகிறார். இந்தி திணிப்பு  தொடர்பாக பா.ஜனதா அமைச்சர்கள், நிர்வாகிகள், முதல்வர் என யாரும் வாய் திறக்காத நிலையில், கவர்னர் மட்டும், தவறான தகவலை கூறி வருகிறார். மத்திய அரசின் ஒரு மொழி கொள்கையை படிப்படியாக நடைமுறை படுத்துவதற்கான முதல் படியாக இது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News