உள்ளூர் செய்திகள்
சீற்றமாக காணப்பட்ட கடல்

வலுவிழந்தது அசானி புயல்- கடலூரில் கடல் சீற்றத்தால் வீடுகளில் முடங்கிய மீனவர்கள்

Published On 2022-05-11 10:27 GMT   |   Update On 2022-05-11 10:27 GMT
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
கடலூர்:

தெற்கு வங்கக்கடலில் உருவான அசானி தீவிர புயலால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இந்த அசானி தீவிர புயல் ஆந்திரா-ஒடிசா இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் இந்தப் புயல் இன்று வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று காலை முதல் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும் நேற்று நண்பகல் முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது.

குறிப்பாக தாழங்குடா பகுதியில் கடல் அலை 20 முதல் 30 அடி உயரத்திற்கு எழுந்தது. இதன் காரணமாக கடற்கரை பகுதியில் உள்ள சில தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள சூழலில் தற்போது கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலூரில் உள்ள தாழங்குடா, தேவனாம்பட்டினம், துறைமுகம் பகுதி மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.

மேலும் பைபர் படகு மற்றும் கட்டுமர படகுகளும் கடலுக்கு செல்லாததால் அவை அனைத்தும் கடற்கரையோரம் உள்ள பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் அவர்கள் தங்கள் வலைகளை பின்னும் வேலையிலும் படகுகளை சீர் செய்யும் வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News