உள்ளூர் செய்திகள்
சூறையாடப்பட்ட மீன் கடை.

நள்ளிரவில் தனியார் மீன் கடை சூறை

Published On 2022-05-10 10:45 GMT   |   Update On 2022-05-10 10:45 GMT
அரியலூர் அருகே நள்ளிரவில் தனியாருக்கு சொந்தமான மீன் கடையை சூறையாடிய மர்ம நபர்கள் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையம் அருகே நகைக்கடை வைத்திருப்பவர் செல்வராசு. இவருக்கு சொந்தமான இடம் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் பிள்ளையார் கோவில் அருகே உள்ளது. அதில் பலர் வாடகைக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். 

அதேபோன்று வல்லம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மீன் கடையின் தகர சீட்டுகளை ஆக்ஸா பிளேடு கொண்டு அறுத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் மீன் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து கடையில் சுவருக்காக அடைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகள் அனைத்தையும் வெட்டி சேதப்படுத்தி சென்றுள்ளனர். 

மேலும் கடையில் வைத்திருந்த மீன்களையும் அள்ளி சென்றதாக கூறப்படுகிறது. அதேபோன்று அருகில் கொட்டகை அமைக்க நடப்பட்டு இருந்த சிமெண்ட் தூண்களையும் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். 

இன்று காலை வழக்கம் போல் காலை மீன் வியாபாரம் செய்ய வந்த பெரியசாமி கடை சூறையாடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து இடத்தின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் நில உரிமையாளர் செல்வராசு செந்துறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மீன் கடையை சூறையாடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மீன் கடை சூறையாடப்பட்ட சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News