திட்டக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் திருட்டு
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே போத்திரமங்கலம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கு எழுமாத்தூர், பட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக நெல் மணிகளை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு கொட்டி வைத்துள்ளனர். நேற்று இரவு மர்ம நபர்கள் அங்கு உள்ள நெல்மணிகளை சுமார் 10க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நெல் திருடிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தை அடுத்து 50க்கும் மேற்பட்ட அப்பகுதி விவசாயிகள் அங்கு ஒன்று கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இது குறித்து விவசாயிகள் கூறும்போது இந்த கொள்முதல் நிலையத்தில் இரவு நேரத்தில் இரவு காவலர் இல்லை. இங்கு விவசாயிகள் கொட்டி வைக்கும் நெல் மூட்டைக்கு கொள்முதல் நிலையத்தில் உரிய பாதுகாப்பு இல்லை. எனவே உடனடியாக இரவு காவலர் நியமனம் செய்ய வேண்டும். ஒரு பக்கம் அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்ய தாமதப்படுத்துவது , இன்னொரு பக்கம் திடீர் மழையால் பாதிப்பு, நேற்று புதிதாக இரவு நேரங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை திருடி செல்கின்றனர். இதேபோல் தொடர்ந்து அவல நிலையில் தான் விவசாயிகளின் நிலைமை என கூறினார்கள்.