உள்ளூர் செய்திகள்
மரணம்

சென்னை விமான நிலையத்தில் வாலிபர் மர்ம மரணம்

Update: 2022-05-07 08:43 GMT
சென்னை விமான நிலையத்தில் வாலிபர் மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலந்தூர்:

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு முன்னால் உள்ள கார் பார்கிங் பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இதை பார்த்த விமான பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசாா் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா். அவர் முகத்தில், கையில் பலத்த காயம் இருந்தது.

அவரை சோதனையிட்ட போது அவருடைய பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டில் சபரி கணேஷ் (வயது 26) கள்ளக்குறிச்சி என்ற முகவரி இருந்தது.

இவர் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த, விமான பயணியா?அல்லது வெளிநாடு செல்பவர்கள் யாரையாவது வழியனுப்ப வந்தாரா? என்பது தெரியவில்லை. இதை அடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் எப்படி உயிரிழந்தாா் என்பது மர்மமாக இருக்கிறது. இவா் கொலை செய்யப்பட்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விமானநிலைய வளாகத்திற்குள் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் போலீசாா் ஆய்வு செய்கின்றனர்.

சென்னை விமானநிலையத்தில் மா்மமான முறையில் வாலிபா் ஒருவா் உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே சென்னை விமான நிலைய கார் பார்க்கிங்கில் டீ விற்பனை போட்டியில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News